தமிழகத்தில் 8,000 மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்..!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 8 வாரங்கள் ஊதியம் தரவில்லை என்பது தவறான தகவல். இந்ததிட்டத்தில் மத்திய அரசு ரூ.2,100-கோடியை விடுவிக்காமல் இருந்தது. இதில் ரூ.1,800 கோடி கடந்த வாரம் மத்தியஅரசு வழங்கியது அந்த தொகைபணியாளர்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.300 கோடியையும் மத்திய அரசு விடுவித்தால்உடனடியாக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
தமிழக கிராமப் புறங்களில் 1,496 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டுவதற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2,500மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்ட ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி இல்லாத கிராமங்களே இல்லை என்றநிலையை உருவாக்கி வருகிறோம். தமிழகத்தில் 2024-ம்ஆண்டு இறுதிக்குள் 8,000 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டி முடிக்கப்படும். விரிவடையும் நகரப் பகுதி, கிராமப் பகுதிகளுக்கு போதிய மின் வசதி ஏற்படுத்தி தர திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.