பெட்ரோல் விலை 8 ரூபாய் குறைப்பு.. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது..!

பெட்ரோல் மீதான வாட் வரியை டில்லி மாநில அரசு குறைத்ததைத் தொடர்ந்து, இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைகிறது.
கடந்த நவம்பர் 4ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது. மத்திய அரசை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகள் வரிகளை குறைத்து வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் நிலையில், கடந்த 27 நாட்களாக அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், டில்லி மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 19.40 சதவீதமாக குறைத்தது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் குறைகிறது. இந்த உத்தரவு, இரவு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முடிவு முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
டில்லியில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.97க்கு விற்கப்படும் நிலையில், இன்று நள்ளிரவு முதல் அதன் விலை ரூ.95.97 ஆக குறையும். டீசல் விலை ரூ.86.67க்கு விற்கப்படுகிறது.