8 மாத குழந்தையை ரூ.25,000க்கு விற்ற தாய்!!
கிருஷ்ணகிரியை அடுத்த மாதேப்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் தனது 8 மாத குழந்தையை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையின்போது, தனலட்சுமி முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, பெண் ஒருவரிடம் குழந்தையை தனலட்சுமி வழங்கியது தெரியவந்தது.
இதனடிப்படையில் தனலட்சுமியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த உதயா-சுமதி தம்பதி, குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக முகநூலில் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, அந்த தம்பதியை தொடர்புகொண்ட தனலட்சுமி குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் பேசியுள்ளார். இதையடுத்து, திருப்பூர் தம்பதியை கிருஷ்ணகிரிக்கு வரவழைத்து, குழந்தையை வழங்கியுள்ளார்.
ஆனால், குழந்தை குறித்து விசாரிக்க சுமதியை தொடர்புகொண்டபோது, செல்போன் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்தே, காவல் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனலட்சுமி, குழந்தையை வாங்கிய சுமதி, உதயா ஆகிய 3 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
newstm.in