பயணிகள் அவதி : அமிர்தரசஸ் வழித்தடத்தில் 73 ரயில்கள் ரத்து..!
பஞ்சாப் ஹரியானா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஷம்புவில் விவசாயிகள் கடந்த 5 தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளதை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் விவசாயி்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாட்டியாலா மாவட்டத்தின் ஷம்புவில் சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்பின் கீழ் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அம்பாலா-அமிர்தசரஸ் வழித்தடத்தில் ஷம்பு ரயில் நிலையத்தில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக 73 ரயில்கள் நேற்று (21-ம் தேதி) ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக பல ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.