வாரிக் குவித்தது டாஸ்மாக்.. தீபாவளி விற்பனை 708.29 கோடி ரூபாய்..!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த 3 நாட்களில் மட்டும் 708.29 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களின்போது அரசின் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில், மற்ற பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 22 மற்றும் 23-ம் தேதிகளில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.464.21 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. தீபாவளி தினமான நேற்று (அக்.24-ம் தேதி) தமிழகம் முழுவதும் ரூ.244.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இதன்படி, கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.154 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.140 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.142 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ.139 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.133 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.