தவெக-வில் 70,000 பூத் கமிட்டி செயலாளர்கள்..!தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டம்..!

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என உறுதியாக உள்ள விஜய், அதற்கான பணிகளில் தீவிரமாக உள்ளார்.
திமுகவை தனது அரசியல் எதிரி என அறிவித்துள்ள விஜய், திமுகவை விமர்சித்து கருத்துக்களை முன் வைத்து வருகிறார்.
இதேபோல் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசையும் விமர்சித்து வருகிறார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரையும் சந்தித்துள்ள விஜய், கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகளை பெற்றுள்ளார். ஏற்கனவே கட்சியின் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், தற்போது பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 70 ஆயிரம் பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பூத்துக்கு ஒரு செயலாளர் என்ற வகையில் 70 ஆயிரம் பேரை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர்கள் இந்த பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனத்திற்காக பிரத்யேக ஆன்லைன் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் பூத் கமிட்டி செயலாளர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.