சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றிவிடப்பட்ட 7 ரயில்கள்

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இடி மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பிரதான சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சுரங்கப்பாதைகளில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. மரங்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மழைபொழிவு அதிகமாக இருந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையம் அமைந்துள்ள மீனம்பாக்கத்தில் மட்டும் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் மாற்றி விடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் திருவள்ளூர், ஆவடி, கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கோவை செல்லக்கூடிய இன்டர்சிட்டி விரைவு ரெயில், லால்பாக் விரைவு ரெயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.