மது விற்பனையை தட்டிக்கேட்ட 68 வயது சமூக ஆர்வலர் வெட்டி கொலை..!
ஒசூர் அருகே உள்ள சின்ன பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (65). விவசாயியான இவருக்கு ரத்தினமா என்ற மனைவியும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த சூழலில் இவரது மூத்த மகள் சின்ன புட்டம்மாவின் மகனான வேல்முருகனுடன் (பேரன்) இருசக்கர வாகனத்தில் மத்திகிரி காவல் நிலையத்துக்கு வழக்கு ஒன்றின் விசாரணைக்கு கையெழுத்திட முனிராஜ் நேற்று சென்றிருந்தார்.
காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது மத்திகிரி கால்நடை பண்ணை அருகே சென்றபோது அவர்கனை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூவர் முனிராஜ் சென்ற இருசக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளினர்.
இதில் முனிராஜும் அவரது பேரன் வேல்முருகனும் கீழே விழுந்தனர்.
இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட அவர்கள், முனிராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முனிராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.