வெட்டித்தனமாக சுற்றியதாக 6,30,662 வாகனங்கள் பறிமுதல்.. ரூ.17,84,47,876 அபராதம் வசூல்..!!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸானது பரவி அனைத்து மக்களையும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. தற்போது, இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் படையெடுக்க தொடங்கியுள்ளது.
இதனால், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசும் மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் பின்னர், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8 லட்சத்து 41 ஆயிரத்து 230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்தவர்களின் 6,30,662 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறி 7 லட்சத்து 66 ஆயிரத்து 717 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.17,84,47,876 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
newstm.in