1. Home
  2. தமிழ்நாடு

61 நாள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: உற்சாகத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்..!

11

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் நேற்று இரவுடன் (14-ம் தேதி) நிறைவடைந்தது. 

இந்த தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித்துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. 

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித்தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தனர். தடைக்காலம் தற்போது முடிவடைந்துள்ளதால் மீன்பிடிக்க கடலுக்குச்செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

மீன்பிடி துறைமுகத்தில் படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப்பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும், சில மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கடைசி நேர மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடித்தடை காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.   

இந்நிலையில்,  தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.கடந்த இரண்டு மாதங்களாக வருமானமிற்றி தவித்து வந்த மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தில் அதிக மீன்கள் உற்பத்தியாகி இருக்கும் என்பதால் அதிகளவில் மீன்பாடும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடலுக்குச் செல்கிறார்கள். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கரை திரும்புவார்கள். 

மீனவர்கள் கடலுக்குச் செல்வதையடுத்து மீன்களின் வரத்து அதிகரிக்கும். இதனால், மீன்களின் விலை குறையத் தொடங்கும்.  

Trending News

Latest News

You May Like