சீன மக்கள் தொகை 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது..!!
60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள் தொகை கடுமையாக குறைந்துள்ளது. இதனால், உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடு என்ற அந்தஸ்தை சீனா, இந்தாண்டு இந்தியாவிடம் இழக்கும் என கூறப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடாக சீனா உள்ளது.
கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகை, 141 கோடியாக உள்ளது. இது, 2021 இறுதியில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையை விட, 8.50 லட்சம் குறைவாக உள்ளதாக, அந்நாட்டின் தேசிய புள்ளியியல் முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவில், 1961க்கு பிறகு முதல்முறையாக இந்த அளவுக்கு மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு 95 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.
இது, இதற்கு முந்தைய ஆண்டில், 1.1 கோடி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1950க்கு பின் குழந்தை பிறப்பு விகிதம் முதல்முறையாக குறைந்துள்ளது. இறப்பு விகிதமும், வழக்கத்தை விட கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று பரவல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் சீனாவின் பொருளாதாரம் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், சீனா உலகின் அதிக மக்கள் தொகை உடைய நாடு என்ற அந்தஸ்தை, இந்தியாவிடம் இந்தாண்டு இழக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.