நாளை முதல் அமலுக்கு வரும் 6 முக்கிய மாற்றங்கள்..!
LPG மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை
வழக்கமாக, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு (LPG) மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைக்கின்றன. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 1 அன்றும் விலை மாற்றம் இருக்கலாம். LPG விலையைப் போலவே, இயற்கை எரிவாயு (CNG) மற்றும் குழாய்வழி இயற்கை எரிவாயு (PNG) ஆகியவற்றின் விலைகளும் மாதத்தின் தொடக்கத்தில் மாற வாய்ப்புள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் வீட்டு உபயோகிப்பாளர்களின் பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
UPI பரிவர்த்தனைகளில் புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), UPI அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தவும், சர்வர் அழுத்தத்தை குறைக்கவும் சில புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பேலன்ஸ் செக் செய்ய வரம்பு கொண்டுவரப்பட உள்ளது. இனி ஒரு நாளில் 50 முறை மட்டுமே UPI செயலிகள் மூலம் வங்கிக் கணக்கின் இருப்பை சரிபார்க்க முடியும். மேலும் சந்தாக்கள், EMI போன்ற மாதாந்திர தானியங்கி பணம் செலுத்துதல்கள் (Autopay) இனி நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணிக்குள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும். இது பீக் ஹவர்ஸில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும்.
ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அதன் நிலை (Success/Failure) குறித்து சில நொடிகளில் பயனருக்கு தெரிவிக்கப்படும். இனி 'Pending' அல்லது 'Processing' என நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும். புதிய வங்கி கணக்கை UPI உடன் இணைக்கும்போது, கடுமையான சரிபார்ப்பு முறைகள் பின்பற்றப்படும். இது மோசடிகளைத் தடுக்க உதவும். அதே போல தினசரி பரிவர்த்தனை வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது. பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 லட்சமும், கல்வி மற்றும் மருத்துவமனை போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ரூ.5 லட்சமும் வரம்பாக தொடரும்.
கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்
சில வங்கிகள் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டுகளின் மதிப்பு மற்றும் விதிகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட வங்கியின் அறிவிப்புகளை கவனமாக படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி விடுமுறைகள்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் விடுமுறை பட்டியலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பல நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும். எனவே, வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய வேலைகள் இருந்தால், விடுமுறை நாட்களை முன்கூட்டியே சரிபார்த்து திட்டமிடுவது நல்லது.
விமான எரிபொருள் விலை
விமான எரிபொருள் விலையும் மாதந்தோறும் மாற்றியமைக்கப்படும். இதில் மாற்றம் ஏற்பட்டால், அது விமான கட்டணங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற நிதி மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருப்பது, தேவையற்ற குழப்பங்கள் மற்றும் நிதி இழப்புகளை தவிர்க்க உதவும்.