இலங்கையில் கார் பந்தயத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி..!

இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. மலைப் பகுதியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கார் பந்தயத்தை கண்டுகளித்தனர்.
பந்தயகளத்தில் கார்கள் சீறிப்பாய்ந்தன. அப்போது, ஒரு கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதையடுத்து, அருகில் இருந்த பார்வையாளர்கள் ஓடி சென்று காரில் சிக்கிய வீரரை வெளியே எடுக்க முயற்சித்து கொண்டிருந்தனர்.
அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டிருந்த மற்ற கார்கள் வேகமாக வந்தன. அதில் ஒரு கார் பார்வையாளர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக கார் பந்தயம் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.