பிரபல காமெடி நடிகர் வீட்டில் 59 சவரன் நகை திருட்டு: கையும் களவுமாக சிக்கிய பணிப் பெண்..!
தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர், கருணாகரன். பல துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு பெரிய புகழை தேடித் தந்த திரைப்படம் சூது கவ்வும்.
நளன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இயக்குநர் நளன் குமாரசாமியை குறும்படம் படத்திற்காக சந்தித்த போது, கருணாகரனுக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, யாமிருக்க பயமே,ஜிகர்தண்டா, நண்பேன்டா, நேற்று இன்று நாளை, ஹலோ நான் பேய் பேசறேன், இறைவி, கோ 2, ஒரு நாள் கூத்து, தொடரி என அடுத்தடுத்து வெற்றி படத்தில் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகராக விளங்கி வருகிறார். கருணாகரன் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.
இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் கருணாகரன் வீட்டில் கடந்த மாதம் 2ம் தேதி முதல் 29ம் தேதி வரை 59.7 சவரன் நகை சிறிது சிறிதாக மாயமானது. வீட்டின் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது யாரிடமும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால், தாம்பரம் மாநகர காவல் ஆணையரிடம் கருணாகரன் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்தனர். மேலும், வீட்டில் உள்ள அனைவரின் கை ரேகையும் பதிவு செய்து ஆய்வு செய்யப்பட்டது. கருணாகரன் வீட்டில் காரப்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விஜயா என்ற விஜிலா மேரி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். போலீஸார் நடத்திய சோதனையில் அவரது கை ரேகை ஒத்துப்போனது.
இதனையடுத்து போலீஸார் தீவிரமாக விஜிலா மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, சிறுகச் சிறுக நகைகளைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து, திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.