1. Home
  2. தமிழ்நாடு

56 வயதில் ரூ.1000 வாங்கிய லஞ்சத்திற்கு தள்ளாடும் வயதில் சிறைக்கு செல்லும் சார் பதிவாளர்..!

1

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மகன் ஜோதிமணி (வயது 66), விவசாயி. இவர் கோரம்பள்ளம் பகுதியில் தனக்கு சொந்தமான 3.87 ஏக்கர் நிலத்தை பிளாட் போட்டு விற்பனை செய்து வந்தார். இதற்காக கடந்த 21.9.2006 அன்று ஜோதிமணி 2 பிளாட்டுகளை விற்பனை செய்தார். அதனை மேலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளராக இருந்த தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 74 வயதாகும் சின்னத்தம்பியை (அன்றைக்கு 56 வயது) அணுகினார்.

அப்போது சார்பதிவாளர் சின்னத்தம்பி, 2 பிளாட்டுகளையும் பதிவு செய்வதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து ஜோதிமணி, தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் 22.9.2006 அன்று பத்திரப்பதிவுக்கு ஜோதிமணி சென்றுள்ளார். அங்கு சார் பதிவாளர் சின்னத்தம்பியிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக சின்னத்தம்பியை பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீண்ட வருடங்களாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வசித்குமார், குற்றம் சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதானால் கடைசி காலத்திலும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாகும்.

Trending News

Latest News

You May Like