படிப்புக்கு வயதில்லை என நிரூபித்த 56 வயது பெண்மணி..!!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி தனம் (56). இந்த தம்பதி கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியரின் 2 மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உளளனர். தனம் 8ம் வகுப்பு முடித்த 2 ஆண்டுகளிலேயே திருமணமாகி விட்டது. அதன் பிறகு, பல்வேறு தருணங்கிளல் படிப்பை தொடர முயன்றும், குடும்ப பொறுப்பு அதிகரித்ததால் காலம் கடந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அவர், 247 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளியை விட்டு நின்று 42 வருடங்களுக்கு பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதுகுறித்து தனம் கூறுகையில், 1980-ல் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. பதினைந்து வயதில் திருமணமானது. இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி, பேரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது, மனவளக்கலையின் யோகா பறிற்சி வகுப்பில் சேர்ந்து, அடிப்படை கோர்ஸ் முடிந்துள்ளேன்.
யோகா ஆசிரியர் பயிற்சி பெற விரும்புகிறேன். ஆனால் அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் 3 மாதமாக படித்தேன். எனது கணவர் மற்றும் மகன்கள் ஊக்கமளித்தனர். படிப்பிற்கு எந்த தடையும் இல்லை ஆர்வமும், முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் படித்து தேர்ச்சி பெறலாம். எனது இந்த முயற்சியை, தெரிந்தவர்கள் யோகா பயிற்சியளார்கள், உறவினர்கள் பலரும் பாராட்டுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.