இன்று மற்றும் நாளை 53 பள்ளிகளுக்கு விடுமுறை..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (பிப்ரவரி 5) தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் களத்தில் திமுக vs நாம் தமிழர் கட்சி என நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதிதாக தொடங்கபட்ட விஜய் தலைமையிலான தவெக வரை பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்ததால் திமுக, நாதக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர்.
இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிகளுக்காக வெளியூரில் இருந்து வந்தவர்கள், உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 53 பள்ளிகளுக்கு இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.