1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் தமிழ்நாட்டில் 53 லட்சம் பயனாளிகள் - மத்திய அமைச்சர்..!

1

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை பாஸ்டியூர் நிறுவனத்தில் ஆய்வு செய்த அவர், அங்கு தயாரிக்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், உபாசி அரங்கில் நடைபெற்ற ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கடந்த 1907ம் ஆண்டு துவங்கப்பட்டு, நூற்றாண்டு கடந்தும் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது ராபீஸ் நோய் கண்டறியும் மையமாகவும் செயல்படுகிறது. முத்தடுப்பு ஊசி மருந்து, வெறிநாய் கடிக்கு பயன்படுத்தப்படும் மருந்து, போலியோ, ரணஜன்னி, கக்குவான் இருமல் என பல நோய்க்கான மருந்துகள் இந்த ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் கொரோன தடுப்பு மருந்துகளை இங்கு தயாரிப்பது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்நிறுவனத்தின் மேலும் ஒரு ஆய்வகம் கட்ட கோவை பிரஸ் காலனி பகுதியில் 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும், ”மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், இதுவரை 27 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 53 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,154 தனியார் மருத்துவமனைகள் உட்பட 2,084 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 96.25 லட்சம் பேருக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like