வந்தாச்சு 50 - 50 ஒர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன்!
டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்று தரக் குறியீடு 450க்கு மேல் பதிவாகி வருகிறது. இதையொட்டி மாற்று ஏற்பாடுகளை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. GRAP IV கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, டெல்லிக்குள் ட்ரக்குகள் நுழைவதற்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட பழைய டீசல் மீடியம் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்-3 பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள தலைநகர் மண்டல பகுதியில் மாற்றங்கள் ஏதுமில்லை. அதேசமயம் காஸியாபாத், குர்கான், நொய்டா ஆகிய நகரங்களில் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அமைச்சர் கோபால் ராய் பகிர்ந்திருக்கிறார். டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவை குறைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்தும் வகையில் தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு ஒருபுறம் என்றால், பனிமூட்டம் மறுபுறம் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. வாகன ஓட்டிகள் அவதியுறும் நிலை காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 119 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 6 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லிக்கு வர வேண்டிய 13 ரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.