1. Home
  2. தமிழ்நாடு

5 மாத சம்பளம்.. மருத்துவச் சலுகை.. இந்தியாவில் ஆட்குறைப்பை தொடங்கியது அமேசான்..!


பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், ‘விரைவில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடைபெறும்’ என்று கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அமேசான் தனது ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அத்துடன், இந்தியாவில் மட்டும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அமேசான் சிஇஓ ஆண்டி ஜேஸி வெளியிட்ட ஒரு பதிவில், “உலகம் முழுவதும் அமேசான் அலுவலகங்களில் 18 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, வரும் ஜனவரி 18-ம் தேதிக்குப் பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இந்தியாவில் பெங்களூரு, குருகிராம் அலுவலகங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை பாயும் என்றும் மனிதவள துறை, தொழில்நுட்பத் துறை என்று பல துறை ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இந்தியாவில் சராசரியாக 1000 என ஆரம்பித்து உலகம் முழுவதும் 18 ஆயிரம் அமேசான் ஊழியர்கள் ஆட்குறைப்பால் பாதிக்கப்படவுள்ளனர் என்றும் ஊடகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏற்கெனவே வேலை இழந்த பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக லிங்க்டு இன் போன்ற பக்கங்களில் தாங்கள் வேலை இழந்துவிட்டதாகவும், தற்போது புதிய வேலைக்கு தயாராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். வேலையிழந்தவர்களில் புதிதாக சேர்ந்தவர்கள் தொடங்கி பல ஆண்டுகள் அனுபவம் உள்ளோர் வரை பலரும் அடங்குவர்.

இதுவரை வேலையிழந்தவர்களுக்கு அமேசான் முறையாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஊழியர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் ஒதுக்கி அன்று நேரில் வந்து பணிநீக்கத்திற்கான விளக்கத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல், பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்குவதாகவும் தெரிகிறது.

Trending News

Latest News

You May Like