1. Home
  2. தமிழ்நாடு

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள 5 வழிகள்..!

1

பயம் :

காரணமே இல்லாமல் எப்போது கவலையான உணர்வு அல்லது பய உணர்வுடனேயே காணப்படுவது. நமக்கு ஏதாவது தவறாக நடந்து விடுமோ என எப்போதும் பதற்றத்துடனும், பயத்துடன் காணப்பட்டால் கண் திருஷ்டி பாதிப்பிற்கு ஆளானதாக அர்த்தம்.

நடவடிக்கையில் மாற்றம் :

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் நடவடிக்கைகள், பழக்கங்கள் திடீர் திடீரென மாறிக் கொண்டே இருக்கும். அவர்களின் மனநிலையும் மாறிக் கொண்டே இருக்கும். நிலையான ஒரு கருத்துடன் இருக்க முடியாது. மனம் தடுமாறிக் கொண்டே இருக்கும். மன அமைதி இழந்து, வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிலான உணர்வுகளை சந்திக்க நேரிடும்.

சோர்வு :

எப்போதும் சோர்வுடனும், சுறுசுறுப்பு இன்றியும், அனைத்து விஷயங்களிலும் மந்தமாக நடந்து கொள்வது, மனமும், உடலும் எந்த மருந்திற்கும் கட்டுப்படாமல், அப்போதும் நோயால் பாதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும், எதிலும் மனம் நாட்டம் இருந்தாலும் அவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம்.

தடுமாற்றம் :

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்துடன் மனம் ஒன்றி எந்த ஒரு செயலை செய்ய முடியாமல் ஒரு விதமான குழப்பத்துடனேயே காணப்படுவார்கள். எந்த ஒரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பம், தடுமாற்றத்துடனேயே இருப்பார்கள். இதனால் எந்த வேலையிலும் அவர்களால் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.

துரதிஷ்டம் :

அடுத்தடுத்த விபத்துக்கள், தொடர்ந்து எடுக்கிற காரியங்களில் எல்லாம் தோல்வி, அடுத்தடுத்து கெட்ட விஷயங்களாக நடப்பது ஆகியவை இருந்தால் நீங்கள் கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். தொடர்ந்து காரணமே இல்லாமல் தடைகள், பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் நீங்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

கண் திருஷ்டி பரிகாரங்கள்

மலர்கள் :

வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண்படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம். பூக்களுக்கு திருஷ்டியை கிரகத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளது. வீட்டு வாசலில் செடிகள் வைக்கிறவர்கள் வெறும் அலங்காரச் செடிகளை வைக்காமல் ஒரு ரோஜா செடியாவது வைக்க வேண்டும். ஏனென்றால் ரோஜா செடியில் முட்கள் இருக்கும். முள் செடிகள் திருஷ்டியை போக்கிடும்.

வாழை :

ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. சிலர் பூசணிக்காய், அகோரமான பொம்மை என தொங்க விடுவார்கள்.

இவை எல்லாவற்றையும் விட இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடுங்கள்.

ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்போதே களைந்துவிடும் அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

மீன்தொட்டி :

இது வீடு, அலுவலகம் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்கலாம்.

உப்பு :

குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சம்பல், அலர்ஜி ஏதாவது ஏற்பட்டால் நீங்கிடும். இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இப்படிக் குளிக்கலாம்.

எலுமிச்சை :

நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் கற்றாழை கட்டி தொங்கவிடலாம்.

வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொடங்க விடலாம். செவ்வாய் கிழமையில் இதைச் செய்ய வேண்டும்.

படிகாரம் :

உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அல்லது உங்களது தொடர் வெற்றியால் கூட கண் திருஷ்டி விழும். இதனால் வேலையில் திடீர் மாற்றங்கள், தடங்கள்கள் அடிக்கடி வரும். இப்படியிருந்தால் அதனை படிகாரத்தைக் கொண்டு சரி செய்யலாம்.

கடைகளில் படிகாரக் கல் என்றே கிடைக்கிறது. அதனை வாங்கிக் கொள்ளுங்கள். திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின்னர் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை சுற்றவேண்டும்.

தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். பின்னர் அதனை முச்சந்தியில் போட்டுவிட்டு திரும்பி பாராமல் வந்திடுங்கள்.

படிகாரத்தை நீரிலும் போடலாம். அப்படிச் செய்தால் அந்த நீரை பிறர் கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

ஆகாயகருடன் கிழங்கு :

கண் திருஷ்டி நீக்கும் பொருட்களில் மிக முக்கியமானது "ஆகாய கருடன் கிழங்கு". இது நாட்டு மருந்து கடைகளிலும், சந்தைகளிலும் கிடைக்கும். இதன் அளவை பொறுத்து விலை மாறுபடும்.

இதை வாங்கி கிழங்கை சுற்றி வளர்ந்திருக்கும் வேர்களை நீக்காமல் தண்ணீரில் கழுவி, முழுவதும் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து வீட்டிற்கு வெளியே வாசலில் கட்டினால் கண்திருஷ்டி நீங்கி விடும்.

இதை வீட்டிற்கு உள்ளே கண்டிப்பாக கட்ட கூடாது.

தண்ணீர் :

நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து தொடர்ந்து ஆச்சரியப்பார்வையை வீசினால் அல்லது பொறாமைப்பட்டால் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள்.

இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

எண்ணெய் :

உடல் மெலிந்து, சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டே இருந்தால் கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லவேண்டும். பின்னர் அதனை யாருக்காவது தானமாக கொடுத்துவிட வேண்டும்.

கால்கட்டைவிரல் :

பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கடுகு :

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும். இது கண் திருஷ்டியை போக்கும் இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்ய வேண்டும்.

குழந்தை :

கைக்குழந்தைகளுக்கு கண் திருஷ்டி பட்டால் சரியாக உணவு சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஒருகைப்பிடி உப்பை எடுத்து, தாய் மடியில் குழந்தையை வைத்து இடமிருந்து வலமா மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி அப்படியே குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி அந்த உப்பை தண்ணியில போட்டிட வேண்டும்.

Trending News

Latest News

You May Like