1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்கத் தடை!

1

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நாளை (04.03.2024) சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன்பேரில், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், காவல் இணை ஆணையாளர்கள், காவல் துணை ஆணையாளர்கள். உதவி ஆணையாளர்கள், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 15,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் நிகழ்ச்சி நடைபெறும் சென்னை, நந்தனம். YMCA மைதானம், சென்னை விமான மான நிலையம், மற்றும் சுற்றுப்புறங்களிலும், சென்னையில் செல்லும் வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் மாண்புமிகு பாரத பிரதமர் வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குவி.மு.ச. பிரிவு 144ன் கீழ்
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like