மக்களே உஷார்..!! தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,
இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். மீனவர்கள் 8, 9-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் நவ. 5, 6, 7, 8-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ. 5-ம் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.