நாளை முதல் அக்.5ம் தேதி வரை பக்தர்களுக்கு 13 நாட்கள் அனுமதி..!!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே 4500 அடி உயரத்தில் உள்ள மலையின் மீது பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் விசேஷ நாட்களில் இந்தக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர்.
இந்நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.