சூப்பர் மார்க்கெட் ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!

தெலங்கானா நவிபேட்டா கிராமத்தைச் சேர்ந்த சம்யுக்தா - சேகர் தம்பதியினர் தங்களது 4 வயது மகள் ரித்திஷாவை அழைத்துக் கொண்டு நந்திபேட் கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்தனர். விடுமுறை முடிந்ததால் மீண்டும் வீட்டுக்குப் போக வேண்டும் என்று எண்ணி நந்திபேட்டில் உள்ள என் மார்ட் சூப்பர் மாட்கெட்டில் ஷாப்பிங் செய்ய, காலை ஆறரை மணிக்கு மகள் ரித்திஷாவுடன் சூப்பர் மார்க்கெட்டுக்கு சேகர் சென்றார்.
ஷாப்பிங் செய்யும்போது ஃப்ரிட்ஜில் இருந்த சாக்லேட்டை எடுக்க ரித்திஷா முயன்றபோது ஃப்ரிட்ஜில் மின்சாரம் தாக்கியது. நந்திபேட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ரித்திஷா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து நிஜாமாபாத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வதற்குள் குழந்தை இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததையடுத்து, உறவினர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் சூப்பர் மார்க்கெட் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். சூப்பர் மார்க்கெட்டில் ஷாக் ஆனதாகச் சொன்னாலும், அவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிர் இழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.