4 மாதம் சபதம் முடிவுக்கு வந்தது : மீண்டும் செருப்பு அணிந்த அண்ணாமலை..!

திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவது இல்லை என்று அறிவித்ததோடு, ப்ரஸ் மீட் நடந்தபோதே தான் அணிந்திருந்த ஷூவையும் கழற்றினார் பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை.
அண்ணாமலை அதன்பிறகு பங்கேற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் செருப்பு அணியாமல் வெறும் காலில் வந்ததை காண முடிந்தது. இந்த நிலையில் பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தலைவர் பொறுப்பு இருந்து விடைபெற்ற அண்ணாமலைக்கு தேசிய பொதுக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்ற பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை காலில் செருப்பு இல்லாமல் இருக்கிறார்.. அவர் இனி காலில் செருப்பு அணிய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். ஏனெனில் 2026 மே மாதம் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதால் அண்ணாமலை இன்றே காலணி அணிந்து கொள்ளலாம் என்று வலியுறுத்தினார்.
நயினார் நாகேந்திரன் அப்படி சொன்னதோடு மட்டுமில்லாமல், அண்ணாமலைக்கு செருப்பையும் மேடையிலேயே வழங்கினார். நயினார் நாகேந்திரன், எல்.முருகன் ஆகியோர் வழங்க அதனை மறுக்காமல் அண்ணாமலை செருப்பு அணிந்து கொண்டார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த அண்ணாமலை, “2026ஆம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்று முதல் நான் பாஜகவின் சாதாரண தொண்டன். மாநிலத் தலைவர் சொல்வதை கேட்பது எங்கள் கடமை. மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன். நிச்சயமாக தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று கூறி அண்ணாமலை, தற்போது செருப்பு அணிந்திருப்பது அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதமாக மாறியுள்ளது.