நரபலி கொடுக்கப்பட்ட பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை..!
கேரளா இடுக்கி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டப்பனா நகர மக்கள் கடந்த மார்ச் 2ஆம் தேதி ஆட்டோமொபைல் கடையில் திருடியதாக இரண்டு பேரை பிடித்த அவர்களைக் கடுமையாகத் தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களில் விஷ்ணு என்பவருக்கு 27 வயது. அவரது நண்பர் நிதீஷுக்கு 31 வயது. அவர்களள் இருவரிடமும் போலீசார் விசாரனை நடத்தியதில் அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.
இதையடுத்து ஏதோ தவறு நடந்ததற்கான அறிகுறி தெரிந்ததை அடுத்து, காஞ்சியார் ஊராட்சிக்குட்பட்ட காக்காடுகட கிராமத்தில் விஷ்ணுவின் வாடகை வீட்டில் திருடிய பொருட்களை போலீசார் தேடினர். அப்போது ஒரு அறைக்குள் இரண்டு பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் விஷ்ணுவின் தாய் மற்றும் சகோதரி என தெரியவந்தது. அவர்கள் மனநிலை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும் கூறினர்.
அப்போது அந்த பெண்கள் இருவரும் விஷ்ணுவின் தந்தையான 65 வயது என்.ஜி.விஜயன் எங்கே என கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு விஷ்ணு கூறிய பதில்கள் தெளிவற்றதாக இருந்ததால் போலீசாரின் சந்தேகம் தீவிரமடைந்தது. தொடர்ந்து குடும்பத்தினரிடம் விசாரித்ததில் செப்டம்பர் மாதம் முதல் விஜயனுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் திருமணமாகாத விஜயனின் மகள், 2016 ஆம் ஆண்டு திருமணம் ஆகாமலேயே கல்லூரியில் ஏற்பட்ட தகாத உறவின் மூலம் குழந்தை பெற்றதும் பிறந்து 4 நாட்களே ஆன அந்த குழந்தையை குடும்பத்தினர் கொன்று கட்டப்பனாவில் உள்ள தங்களுக்குச் சொந்தமான வீட்டின் வளாகத்தில் புதைத்ததும் தெரியவந்தது.
கட்டப்பனாவில் உள்ள வீட்டில் சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், வீட்டில் புதைக்கப்பட்ட விஷ்ணுவின் தந்தையான விஜயனின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்தனர். அந்த எலும்புக்கூடு விஜயனுடையதுதானா என்பதை உறுதி செய்ய டிஎன்ஏ சோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். விஜயனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றது உடலை புதைத்ததையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை, நரபலி கொடுத்து மாட்டுத் தொழுவத்தில் புதைத்ததாகவும் தெரிவித்தனர். பிறந்த குழந்தையை நரபலி கொடுத்தால் நிறைய பணம், தங்கம் போன்றவை கிடைக்கும் என நிதிஷ் ஆசை வார்த்தை கூறியதாகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று நரபலி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குழந்தை தவறான உறவில் பிறந்ததால் கொஞ்சம் கூட அஞ்சாமல் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
குழந்தையின் எலும்புக்கூட்டை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்ததோடு, பெற்ற தந்தையையும் கொன்று புதைத்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.