தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப் பட்டு, இயக்கப் பட்டு வருகின்றன.
பேருந்துகள், ரயில்கள் நேற்று அதிகம் கூட்டம் காணப் பட்டது. சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்களில் முன் பதிவு செய்து பலரும் பயணித்தனர். சொந்த காரிலும் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்களது ஊர்களுக்கு சென்றனர்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறை சார்பில் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் காவல் துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.