1. Home
  2. தமிழ்நாடு

48 மணி நேரத்திற்குள் விளக்கம் வேணும்.. தமிழக அரசுக்கு ஆணையம் நோட்டீஸ்..!

48 மணி நேரத்திற்குள் விளக்கம் வேணும்.. தமிழக அரசுக்கு ஆணையம் நோட்டீஸ்..!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்த ஆசிரமத்தில் 15 மாணவர்கள் தங்கி இருந்தனர். அதில் ஒரு மாணவர் மட்டும் வெளியில் சென்ற நிலையில் 14 பேர் ஆசிரமத்தில் இருந்தனர். அதில் மாதேஷ், பாபு, சுவாதிஸ் என்ற மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். நான்காம் தேதி மதியம் சுண்டல், பொரிகடலை வந்துள்ளது. அன்று இரவு லட்டு கொண்டு வந்துள்ளனர்.


6-ம் தேதி காலையில் இந்த ஆசிரமத்தில் இட்லி, சட்னி, வெண்பொங்கல், கொண்டைக்கடலை குழம்பு எல்லாம் செய்துள்ளார்கள். மதியம் ரசம் சாதம் மட்டும் செய்துள்ளனர். ஆனால், அதனை சிறுவர்கள் எல்லோருக்குமே சாப்பிட முடியவில்லை, எங்களுக்கு காய்ச்சலாக இருக்கிறது என்று சொல்லி உணவை அப்படியே குப்பையில் போட்டுவிட்டனர். அதில் மூன்று பேர் மட்டும் ரசத்தை குடித்துள்ளனர். இரவும் உணவும் வேண்டாம் என்று சிறுவர்கள் சொல்லிவிட்டார்கள். அனைவருக்கும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்ததால் டோலோ 650 மாத்திரையை பாதி பாதி கொடுத்துள்ளனர்.

காலையில் ஒரே ஒரு மாணவன் மட்டும் வாந்தி எடுத்துள்ளான். அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை எல்லோருமே விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சமைத்த ரசம், சாதம், ஊறுகாய் ஆகியவற்றை கலெக்ட் செய்துள்ளார்கள். பயன்படுத்தப்பட்ட குடிநீரை கூட ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆய்வு முடிவுகள் என்னவாக வருகிறது என்பதை பொறுத்துதான் இதில் என்ன நடந்தது என்று சொல்ல முடியும்" என்றார்.


இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like