453 லோக்சபா சீட்..? தொகுதி எண்ணிக்கையில் குழம்பிய கமல்..!

லோக்சபாவில் மொத்தம் 543 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை தொகுதி மறுசீரமைப்பு மூலம் மாற்றியமைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., கம்யூ., வி.சி., பா.ம.க., காங்., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ம.நீ.ம., சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் கலந்து கொண்டு தனது கருத்தினை பதிவு செய்தார்.
கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த கமல் அளித்த பேட்டியில் கூறியதாவது: 453 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்பது எனது கருத்து. மக்கள் தொகை 145 கோடியாக இருந்தாலும், இந்த 453 எம்.பி.,க்களே நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அந்த எண்ணிக்கையே போதுமானது. இந்த எம்.பி.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்தால், மத்திய அரசு எடுக்கும் அனைத்து அரசு முடிவுகளும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. எதையாவது அதிகரிக்க வேண்டும் என விரும்பினால், மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார். 453 என அவர் திரும்ப திரும்ப இரண்டு முறை கூறினார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கமலை கிண்டல் செய்தும், வசைபாடியும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவருக்கு எத்தனை தொகுதிகள் இருக்கிறது என தெரியுமா… இதை தெரியாமல் அவர் அரசியல்வாதியா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.