மதுவிற்பனையில் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு!!
2023-24ஆம் நிதியாண்டில் மது விற்பனையில் 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உத்தரப்பிரதேச அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசுகளுக்கு மது விற்பனை வருவாய் என்பது மிக முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. புதுச்சேரி, கோவா போன்ற யூனியன் பிரதேசங்கள் சுற்றுலாத்துறையை நம்பி இருப்பதால், அங்கு மதுவிற்பனையும் முக்கிய ஆதாரம்.
அதே போல் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் மதுவிற்பனை வருமானம், மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டு வரமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழ்நாடு மதுவிற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை பல்வேறு எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது வாடிக்கை. அதில் பாஜகவும் அடக்கம். ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலமே மதுவிற்பனையில் வருவாயை கூட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 2023-24ஆம் நிதியாண்டில் மது விற்பனையில் 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட அம்மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்கான நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் பாங்க் பானங்கள் விற்கும் கடைகளுக்கான உரிம கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பிற கட்டணங்களும் உயர்வதால், ஏப்ரல் முதல் மதுபானங்களின் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் கலால் வரி உயர்த்தப்படுவதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
newstm.in