45 ஆயிரம் குடிநீர் இணைப்புகள்.. மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல்..!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் முருகன், "மத்திய அரசு விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் மூன்று தவணைகளில் 6,000 ரூபாயை வங்கியில் நேரடியாக செலுத்தும் திட்டத்தில் தற்போது 16வது தவணை செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்தில் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகளின் நலன் கருதி, விவசாயத்தை பாதுகாக்கும் விதமாக, மண் வளம் பரிசோதனை திட்டத்தில், நிலத்துக்கு தகுந்தாற் போல், எவ்வித உரம், பயிர் பயன்படுத்துவது என்பது குறித்து பயனாளிகளுக்கு அட்டைகள் வழங்கப்படுகின்றன. 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், நீலகிரியில் உள்ள கிராமங்களில் 45 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.