1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் தான் 42% பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள் – அமைச்சர் உதயநிதி..!

1

கடலூர் திமுக கவுன்சிலர் சரத் – நிவேதிதா இணையர் திருமணம் புதுச்சேரியில் இன்று நடந்தது. இத்திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் முதல் பொருளாளரின் கொள்ளுப்பேரனின் திருமணம் இது. ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட உரிமையில்லை. அவர்களுக்கு படிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கம் திமுக தான்.

மகளிருக்கு சொத்தில் சமவுரிமை என இந்தியாவிலேயே முதலில் சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதிதான். தற்போது மகளிர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என திட்டம் கொண்டு வந்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 520 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர். இதனால் மாதம் ஆயிரம் ரூபாய் வரை தமிழகத்தில் மகளிர் சேமிக்கின்றனர்.

பல திட்டங்களால் உயர் கல்வியில் சேருவோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெறுகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கிய ஓராண்டில் 1.16 கோடி பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணிக்குச் செல்லும் பெண்கள் 42 சதவீதமாகவுள்ளனர். மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒருவர் மற்றவரை சுயமரியாதையுடன் நடத்த வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரை வையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Trending News

Latest News

You May Like