நடிகர் கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தென் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். தற்போது, திரைப்படங்களில் நடிப்பதிலும் கருணாஸ் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் கருணாஸ் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சற்று முன் வந்துள்ளார். இதில் அவருடைய உடமைகளை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டுள்ளனர்.அபாயகரமான பொருட்கள் இருப்பதாக அலாரம் ஒலித்துள்ளது.இதனையடுத்து, கருணாஸ் பையை மட்டும் அதிகாரிகள் தனியே எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், 2 பாக்ஸ்களில் சுமார் 40 துப்பாக்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருணாஸின் விமானப் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
பாதுகாப்பு படையினர் 40 துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது. குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.இதனால் விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக மற்ற பயணிகளுடன் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றது.
இதனையடுத்து குண்டுகளை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், கருணாஸை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விமானத்தில் துப்பாக்கி குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்பது தெரியும் எனவும், அவசரமாக புறப்பட்டதால், பையில் இருந்த குண்டுகளை கவனிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.