வரும் 6-ம் தேதி தமிழகத்திற்கான 3-வது வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்..!

தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும். சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்தில் சென்றடையும்.
திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 3 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாநில மக்களுக்கு வந்தே பாரத் ரெயில் ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகிறது எனலாம்.
சுமார் 622 கிமீ தூரம் கொண்ட வழித்தடமான சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. சென்னை - நெல்லை வழித்தடத்தில் என்ன மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் இருக்கலாம் எனவும், மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அதிகபட்சம் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலே இந்த புதிய வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளன. தேவை அதிகம் இருந்தால் மட்டும் 16 பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.