356 மில்லி மீட்டர் கனமழையால் முடங்கிய குஜராத்..!
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் கேர்கம் தாலுகாவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை 6 மணி நிலவரப்படி கேர்காம் தாலுகாவில் 356 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நர்மதா, சவுரஷ்ட்ரா, ராஜ்கோட், தபி, மஹிசாகர், மோர்பி, தாஹோத், வதோதரா என 8 மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தெற்கு குஜராத் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையல் அப்பகுதியின் ஆண்டு சராசரி மழையைவிட 105% அதிகமாக மழை பொழிந்துள்ளது.
குஜராத் உள்துறை செயலர் மாவட்ட நிர்வாகங்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட்டு வெள்ள பாதிப்புகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கனமழை காரணாமாக சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டம் 135.30 மீட்டராக உயர்ந்துள்ளது. குஜராத்தின் 206 நீர்த்தேக்கங்களில் மொத்தம் 3.64 லட்சம் க்யூபிக் அடி நீர் நிறைந்துள்ளது. இது மொத்த கொள்ளளவின் 65 சதவீதம் ஆகும். 75 நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அபாய எல்லையை நெருங்கியுள்ளது. 15 நீர்த்தேக்கங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மழை வெள்ள பாதிப்பால் முடங்கிய சாலைகளை சீரமைப்பதையும், தடைபட்ட மின்சாரத்தை திரும்ப வழங்குவதையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பூபேந்திரா படேல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயராக இருப்பதாகக் கூறியுள்ளார்.