பஸ் கவிழ்ந்த விபத்தில் பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35 பேர் பலி.!
பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு, 50க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மத்திய ஈரானின் யாஸ்த் மாகாணத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானது. இதில், 35 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் லர்கானா நகரைச் சேர்ந்தவர்கள். 18 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்த யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும். டெஹ்ரானில் உள்ள நமது தூதருக்கு இறந்தவர்களின் உடலை, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய நான் அறிவுறுத்தி உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.