ஆசையாக குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட 35 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிப் பகுதியில் உள்ளது முடத்தூர் கிராமம். இங்கு நேற்று மாலை இருச்சக்கர வாகனத்தில் வந்து ஐஸ் விற்ற நபரிடம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஒருசிலர் மயங்கியும் விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஐஸ் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 3 முதல் 15 வரையிலான 35 குழந்தைகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஐஸ் விற்ற நபர் உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா? அவர் விற்பனை செய்த ஐஸில் மயக்க மருந்து கலந்துள்ளதா? கெட்டுப் போன ஐஸை கொடுத்து குழந்தைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் குல்பி ஐஸ் விற்பனை செய்தவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.