1. Home
  2. தமிழ்நாடு

34 வயதே ஆன இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு..!

Q

2018ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பிடித்த சித்தார்த் கௌல், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடினார். இந்த 6 போட்டிகளில் சேர்த்து, நான்கு விக்கெட்களைதான் எடுத்தார். அதன்பிறகு, இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

34 வயதாகும் சித்தார்த் கௌல், பஞ்சாப் அணிக்காக 88 முதல்தர போட்டிகளில் விளையாடினார். அதில், 26.77 சராசரியில் 297 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதில், 17 முறை ஐந்து விக்கெட்களும் அடங்கும்.

இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சித்தார்த், ஓய்வு அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், ‘‘இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே, எனது லட்சியமாக இருந்தது. அந்த வாய்ப்பு 2018ஆம் ஆண்டில் கிடைத்தது. இந்திய அணிக்காக டி20 பார்மெட்டில் 75ஆவது வீரராகவும், ஒருநாள் பார்மெட்டில் 221ஆவது வீரராகவும் இந்திய அணிக்காக விளையாடினேன். அனைத்திற்கும் முடிவு ஒன்று இருப்பதுபோல், எனது கிரிக்கெட் பயணத்திற்கும் ஒரு முடிவு வந்துவிட்டது’’

‘’எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு துணையாக இருந்த கடவுளுக்கும் நன்றி. 2008ஆம் ஆண்டில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. இந்த நிமிடம் முதல், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

சித்தார்த் கௌல், கடைசியாக 2023ஆம் ஆண்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடியிருந்தார். அதன்பிறகு, 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் கழற்றிவிடப்பட்ட அவரை, எந்த அணியும் வாங்கவில்லை. தொடர்ந்து, 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திலும், எந்த அணியும் இவரை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like