நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் பொருநை அருங்காட்சியகம்..!!
தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 13.2 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கிறது. இதற்கான பணிகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. பொருநை அருக்காட்சியக கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் .
நெல்லையில் விழா மேடையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.