தவெக மாநில மாநாடு : தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக்..!
தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்ட அளவில் நடத்தினார். இதற்கு அடுத்த படியாக தவெக கட்சியின் 2வது மாநில மாநாட்டை மதுரையில் நாளை நடத்த உள்ளார் விஜய். இந்த மாநாட்டை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டிற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு 21-ந்தேதி பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், கலை நிகழ்ச்சிகள், உறுதி மொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து விஜய் பேசுகிறார். தொண்டர்கள் பெரும் அளவில் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தவெக மாநாட்டிற்கு இருக்கைகள் தர முடியாது என ஒப்பந்ததாரர்கள் கூறியதால் கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவெக மாநாட்டில் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டு 5 நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 4 பேர் கடைசி நேரத்தில் இருக்கைகள் தர முடியாது என்று கூறியநிலையில், கேரளாவிலிருந்து 50 ஆயிரம் நாற்காலிகள்கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தவெக மாநாட்டுக்கு கேரளாவும் கைகொடுத்துள்ளது. இது தொண்டர்கள் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.