30,000 கிமீ தூரம் பயணித்து உணவு டெலிவரி செய்த சென்னை பெண்!!
2018ஆம் ஆண்டு சென்னையில் இன்ஜினியரிங் முடித்த மானசா கோபால் என்ற பெண் காலநிலை மாற்றத்தை கண்டித்து உருவான குழுவில் இணைந்து இதற்கு முன்னரே அண்டார்டிகா சென்றுள்ளார்.
இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் மானசா கோபால் காலநிலை மாற்றத்தால் உலகின் முக்கியமான கண்டமான அண்டார்டிகா பாதிக்கப்படுவதை உலகுக்கு உணர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக வித்தியாசமான யோசனையை முன்னெடுத்த இவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது. விழிப்புணர்வுக்காக அண்டார்டிகா செல்ல இவருக்கு உதவ பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Food panda முன்வந்தது.
ஒரு விளம்பரமாக இதனை மாற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி அண்டார்டிகாவில் உள்ள ஒருவருக்கு உணவை டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ஏறி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை சென்றடைந்த மானசா பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு சென்று உணவை டெலிவரி செய்துள்ளார். இதற்காக 30,000 கிலோமீட்டர்கள் மற்றும் நான்கு கண்டங்களுக்கு மேல் பயணித்து மானசா சாதனை படைத்துள்ளார்.
இது ஒரு உலக சாதனையாகவும் கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை மானசா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து Foodpanda நிறுவனத்துக்கும் மனசாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
newstm.in