1. Home
  2. தமிழ்நாடு

சிலிண்டருக்கு 300 ரூபாய் குறைவு.. அரசாணை வெளியிட்ட மாநில அரசு!

1

புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. பட்ஜெட்டில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.

இதில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 மானியம் 13 ஆயிரம் பேருக்கு வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது புதிய பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது. சுமார் 70 ஆயிரம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக முதலவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Rangasamy

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தும் திட்டத்திற்கான அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் பெயரில் மகளிர் மேம்பாட்டு துறை இதனை செயல்படுத்துகிறது. குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலைய கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தப்படுகிறது. 21 ஆண்டுகள் கழித்து இந்த பணம் கிடைக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிலிண்டர் மானியத்திற்கு அரசாணை வெளியாகியுள்ளது. இதில் சிகப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் மானியமாக ரூ.300ம், மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு ரூ.150 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த தொகை வழங்கப்பட உள்ளது.

Ration

பட்ஜெட்டில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.300 சிலிண்டர் மானியம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், மஞ்சள் கார்டுகளுக்கு தொகை பாதியாக ரூ.150 என குறைக்கப்பட்டுள்ளது. இந்த மானிய தொகை கௌரவ ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் விரைவில் மானிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.புதுச்சேரியை பொருத்தவரை 20 கேஸ் ஏஜென்சிகளில் 3,00,323 இணைப்புகள் உள்ளன. காரைக்காலில் 4 ஏஜென்சிகளில் 51,957 இணைப்புகள் உள்ளன. மாகி பிராந்தியத்தில்  ஒரு ஏஜென்சிகளில் 9,415 இணைப்புகளும், ஏனாமில் 3 ஏஜென்சிகளில் 17,066 இணைப்புகள் உள்ளன. மொத்தமாக 3,78,761 இணைப்புகள் புதுச்சேரி முழுவதும் உள்ளன.

Trending News

Latest News

You May Like