பீர் விலை 300... கொக்கரக்கோ பாருக்கு பூட்டு..!!
சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மது பாரில் ஒரு பீர் ரூ.300 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாவும், தட்டி கேட்டால் எல்லா மட்டத்திலேயேயும் பணம் கொடுப்பதாகவும் கூறி மிரட்டுவதாக புகார் தெரிவித்து பல்லடம் திமுக மாவட்ட அணி அமைப்பாளர் ஆதங்கத்துடன் திமுகவின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆடியோ ஒன்றை பதிவிட்டு பொதுவெளியில் அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில் "ஒரு கட்சிக்காரனை மிரட்டி 300 தான் பீர் பணத்தை எடுத்து வைனு மிரட்டுறாங்க. ஒரு கட்சிக்காரனுக்கு ஊருக்குள்ள சப்போர்ட் இல்லையா.? யாராவது ஒருத்தர் பணம் வாங்கிட்டா கட்சிக்காரன் பூரா அடிமையா..? இதை பதிவு பண்ணவே எனக்கு வெட்கமா இருக்கு, கேவலமா இருக்கு. ஏன்னா நான் மட்டும் பாதிக்கப்படவில்லை பார்ல குடிப்பது யாரு நம்ம ஊரு காரன் தான் குடிக்கிறான். ஒரு கப் சுண்டலும், பொறியும் கொடுத்துட்டு 300 ரூபா பில்லு.
கேட்டா நகரத்துக்கும் பணம் கொடுக்கிறோம், மேலேயும் பணம் கொடுக்கிறோம். நீ யாரை வேணாலும் கூப்பிடுனு சொல்றாங்க. எதுக்கு சாராய கடைகள் எல்லாம் போய் பணம் வாங்குறீங்க. நீங்க பணம் வாங்குவதற்கு நாங்க கஷ்டப்பட்டு கொண்டு போய் அங்க பணம் கொடுக்கணுமா.? ரூ.170 பீரு 300 ரூபாய்க்கு பொறியும் சுண்டலும். மானங்கெட்ட பொழப்பா இருக்கு" என அந்த ஆடியோவில் பேசி பதிவிட்டுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொக்கரக்கோ பார் உரிமையாளர் முறையாக அனுமதி பெற்று பார் நடத்துவதாகவும் இவ்வளவு விலைக்கு தான் விற்க வேண்டும் என யாரும் உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எந்த கட்சியினருக்கும் போலீசுக்கும் பணம் கொடுப்பதில்லை எனவும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பாரை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முருகபாளையம் ஹெல்த் அண்ட் ரீ கிரியேஷன் கிளப் என்ற பெயரில் 2018-19 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட கிளப் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார். அமைச்சரின் இத்தகைய நடவடிக்கை மூலம் தனியார் பாரில் கூடுதல் விலைக்கு பீர் விற்கப்பட்டது உறுதியாகியுள்ளது.