இனி போலி வீடியோ சித்தரித்தால் 3 ஆண்டுகள் சிறை..!
தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’, ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. ‘புஷ்பா’ படத்தில் நடித்த ராஷ்மிகா இந்திய அளவில் அதிகமான ரசிகர்களை கவர்ந்ததுடன் அப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. தமிழில் வாரிசு படத்தின் மூலமும் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்றார்.
அமிதாப் பச்சனுடன் சேர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார். ‘குட்ஃபை’ எனும் இந்தப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 2வது ஹிந்திப்படமாக சித்தார்த் மல்லோத்ராவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், ராஷ்மிகாவின் மார்பிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று கடந்த சில நாள்களாக இணையத்தில் வேகமாக பரவி வந்தது. இதற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, ராஷ்மிகாவின் ராஷ்மிகாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இணையத்தை பயன்படுத்தும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உறுதி செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒருவரை பற்றிய தவறான அல்லது பொய்யான தகவல்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட இணைய நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தால் சட்டப்படி 36 மணிநேரத்தில் அந்த பதிவு நீக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
அதேபோல், தனிநபரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவது அல்லது சித்திரிக்கப்பட்டு வெளியாகும் பதிவை புகார் அளிக்கப்பட்டு 24 மணிநேரத்தில் இணைய நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட புகைப்படம் அல்லது விடியோவை பதிவிட்டால், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 66டி-இன் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள், நடிகைகள் புகைப்படங்கள் மார்பிங் செய்வது எப்போதும் இருந்துவரும் அருவறுக்கதக்க செயலாக இருந்தாலும் தற்போது முற்றிலும் உண்மையாக இருப்பது போல போலியான ஒன்றினை உருவாக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வளர்ச்சி இப்படியான தீயப் பழக்கங்களுக்கு உபயோகிக்கப் படக்கூடாதென இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.