நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 3 பேர் கைது..!

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், விபத்து நடந்து ஒரு மாதம் ஆகியும் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல குடும்பங்கள் தங்கள் உறவுகளின் உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தண்டனைப் பிரிவு சட்டம் 304 -ன் கீழ் அவர்கள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். பாலசோர் ரயில் நிலைய மூத்த பொறியாளர் அருண்குமார், இளம் பொறியாளர் அமீர் கான், தொழில்நுட்பவியலாளர் பப்பூ குமார் ஆகிய முன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்துக்கான ஆதாரங்களை அழித்ததற்காக இந்திய தண்டனைப் பிரிவு சட்டம் 201 கீழும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் குற்றச் செயலின் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சில நாட்களுக்கு முன்னர் கூறிய நிலையில், இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.