72 மணி நேரத்தில் 3 காவலாளிகள் கொலை.. சைக்கோ கில்லருக்கு போலீஸ் வலை..!
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், கடந்த 72 மணி நேரத்தில் மூன்று காவலாளிகள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 3 பேரில், முதல் காவலாளி சாகர் மாவட்டத்தின் தொழிற்சாலை ஒன்றின் வெளியே படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அவரை, சுத்தியலால் கடுமையாக தாக்கி படுகொலை செய்து விட்டு கொலையாளி தப்பியுள்ளார்.
இரண்டாவது காவலாளி அதே மாவட்டத்தின் கலை மற்றும் வர்த்தக கல்லூரியில் வேலை செய்து வந்துள்ளார். அவர், பெரிய கற்களால் தாக்கி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
மூன்றாவது சம்பவம் நேற்று இரவு ரத்தோனா மாவட்டத்தில் நடந்துள்ளது. இதில், மண்வெட்டியால் தாக்கப்பட்டு காவலாளி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
இதுபற்றி சாகர் மாவட்டத்தின் ஏஎஸ்பி விக்ரம் சிங் குஷ்வாஹா கூறும்போது, “ஒவ்வொரு படுகொலையிலும் வெவ்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்குரிய கொலையாளியை தேடும் பணி நடந்து வருகிறது.
போலீசாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. சந்தேக நபர்களில் ஒருவர் மோதி நகர் பகுதியில் சுற்றித் திரிவது தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மூன்று காவலாளிகள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சைக்கோ கொலையாளியை நெருங்கி விட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.