நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 3 பேர் தற்கொலை!
நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் 19 வயது மகள் ஜோதி துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் வசித்து வந்த மாணவன் ஆதித்யா (20) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மூன்றாவதாக ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் அனைவர் நெஞ்சிலும் பேரிடியாக இறங்கியது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இடையன்பரப்பு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் (21) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அந்த வகையில் நான்கு நாட்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில் இன்று மதியம் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in