விரைவில் இந்த 3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா..! அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்..!
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1996-2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னையில் டைடல் பூங்காவை நிறுவினார்கள். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டடான்-II பகுதியில் 4.16 ஏக்கர் நிலப்பரப்பளவில் 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 63,100 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் 3.40 ஏக்கர் நிலப்பரப்பளவில், 30 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆணைகெளண்டன்பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில், 29 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 55,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது.
இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்கள் வசித்துவரும் மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
.png)