தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி தீக்கு இரையான சோகம்..!!
உத்தரபிரதேச மாநிலம் பகதூர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்பாபு. இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி பூல்மதி. இவர்களுக்கு சாஹில், குட்டு, குல்லி, நந்தினி (3) என நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ராம்பாபு வெளியே சென்றார். மாலையில் அவரது மனைவி, வேலைக்கு சென்றுள்ளார். அவர்களது குழந்தை நந்தினி மட்டும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாட்டு கொட்டகையில் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரம் கழித்து, தீ மளமளவென உயர்ந்ததைக் கண்டதும், பொதுமக்கள் ஓடி வந்தனர். கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீ மேலும் மேலும் பரவியது. இதற்கிடையில் எரிந்து கொண்டிருந்த மேற்கூரை நந்தினி மீது விழுந்தது. இதனால் அவர் பலத்த தீக்காயம் அடைந்து உயிரிழந்தார். அதே நேரத்தில் ஒரு பசுவும் தீயில் கருகியது. மாட்டு தொழுவத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் மற்றும் இதர பொருட்களும் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அலேக்குமார் ஆய்வு செய்தார். பின்னர் சிறுமின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (ஏஎஸ்பி) சமர் பகதூர் சிங் கூறுகையில், பகதூர்பூர் கிராமத்தில் வசிக்கும் ராம்பாபு என்பவரது ஓலை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. ராம்பாபுவின் மூன்று வயது மகள் நந்தினி கூரையின் கீழ் தூங்கி கொண்டிருந்தார்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர் ஆனால் தீயை கட்டுப்படுத்துவதற்குள் சிறுமியும் அருகில் கட்டப்பட்டிருந்த பசுவும் தீயில் கருகி இறந்தன. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.